கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பொறியாளர் பரிதாப சாவு


கோவில்பட்டி அருகே  மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பொறியாளர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் பொறியாளர் பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்மோதி விபத்துக்கு உள்ளானதில் பொறியாளர் பரிதாபமாக இறந்து போனார்.

பொறியாளர்

கோவில்பட்டி மேற்கு பார்க் ரோட்டை சேர்ந்த ஜோதிபாசு மகன் ராஜராஜன் (வயது 29). இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு நாலாட்டின்புத்தூரில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

சாலைப்புதூர் பெத்தேல் ஹோம் அருகில் வரும் போது எதிரே சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த ஜோஸ்வா திவியோன் (25) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள் களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து ராஜ ராஜனும், ஜோஸ்வா திவியோனும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

சாவு

அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ராஜராஜன் சிகிச்சை பலனளிக் காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். ஜோஸ்வாதிவியோன் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, ராஜராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான ராஜராஜனுக்கு திருமணம் ஆகி கார்த்திகா (வயது 24) என்ற மனைவியும், பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தையும் உள்ளது. இந்த சம்பவம் கோவில்பட்டியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story