கோவில்பட்டி அருகே மினிலாரியில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கோவில்பட்டி அருகே மினிலாரியில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி அருகே கேரளாவுக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தணிக்கை
தூத்துக்குடி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கோவில்பட்டி இனாம் மணியாச்சி விலக்கு ரோட்டில் இன்ஸ்பெக்டர் கே.கோட்டைச்சாமி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த மினிலாரியை மடக்கி நிறுத்தினர். உடனடியாக டிரைவர், மினி லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம். இதைதொடர்ந்து போலீசார் அந்த லாரியில் சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
பறிமுதல்
உடனடியாக போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்து சோதனை செய்தனர். அதில் தலா 40 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் மொத்தம் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது. உடனடியாக ரேஷன் அரிசி மற்றும் மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.