கோவில்பட்டி அருகேஏ.டி.எம்.-ல் ரூ.200-க்கு பதில் 20 ரூபாய் வந்ததாக பரபரப்பு
கோவில்பட்டி அருகே ஏ.டி.எம்.-ல் ரூ.200-க்கு பதில் 20 ரூபாய் வந்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே, ஏ.டி.எம்.-ல் ரூ.200-க்கு பதில் ரூ.20 வந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்படுகிறது.
ஏ.டி.எம்.-ல் ரூ.20
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தனியார் ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் நேற்று முன்தினம் படர்ந்தபுளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அய்யப்பன் என்பவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.3,500 எடுத்துள்ளார்.
அப்போது, ரூ.500 நோட்டுகள் 6-ம், ரூ.100 நோட்டு ஒன்றும், ரூ.20 நோட்டுகள் 2-ம் என மொத்தம் ரூ.3,140 மட்டுமே வந்ததாக கூறப்படுகிறது. அதாவது ரூ.200 நோட்டுகளுக்கு பதிலாக ரூ.20 நோட்டுகள் 2 வந்ததாக அவர் கூறினார்.
வங்கியில் புகார்
இது தொடர்பாக அய்யப்பன் புகார் செய்ய முயன்றபோது, அந்த ஏ.டி.எம். மையத்தில் எவ்வித தொடர்பு எண்ணும் (கஸ்டமர் கேர் நம்பர்) இல்லை. பின்னர் அவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஏ.டி.எம். மையத்தை ஆய்வு செய்தனர்.
கண்காணிப்பு கேமரா ஆய்வு
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அய்யப்பனிடம், ரூ.20 நோட்டு ஏ.டி.எம்.-ல் வர வாய்ப்பு இல்லை. இருந்தபோதிலும், இது குறித்து மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தவறு நடந்திருந்தால் இன்னும் 3 தினங்களுக்குள் உங்களது வங்கிக்கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்படும், என்று அந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நெல்லையை சேர்ந்த வங்கி அலுவலர் ஒருவர் கூறும்போது, ஏ.டி.எம். எந்திரத்தில் தவறுதலாக பணம் வந்தால், அந்த ரசீதுடன் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி புகார் செய்யலாம். வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள், என்றார்.
ஏ.டி.எம்.-ல் ரூ.200-க்கு பதிலாக ரூ.20 நோட்டுக்கள் வந்ததாக புகார் கூறப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.