குலசேகரம் அருகே ஒரு தென்னங்குலையில் 107 காய்கள்
குலசேகரம் அருகே விவசாயி ஒருவரின் தென்னை மரத்தில் ஒரு குலையில் 107 காய்கள் காய்த்துள்ளது. அதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
குலசேகரம்,
குலசேகரம் அருகே விவசாயி ஒருவரின் தென்னை மரத்தில் ஒரு குலையில் 107 காய்கள் காய்த்துள்ளது. அதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
107 காய்கள்
குலசேகரம் அருகே சூரியகோட்டை சேர்ந்தவர் ராஜமணி (வயது 60), விவசாயி. இவர் தென்னை, வாழை, மிளகு, ரப்பர் உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே அஞ்சு கண்டறை, காளகம் என்ற இடத்தில் தென்னந்தோப்பு உள்ளது. இங்கு 150 குட்டை மற்றும் நெட்டை தென்னை மரங்களை நடவு செய்துள்ளார்.
இங்குள்ள தென்னை மரங்கள் அனைத்திலும் நல்ல காய்ப் பிடிப்புடன் காய்கள் காய்த்து வருகின்றன. இதில் சராசரியாக ஒரு குலையில் 60-க்கும் மேற்பட்ட காய்கள் காய்க்்கின்றன.
இதில் தற்போது அறுவடை செய்யப்பட்ட ஒரு குலையில் அதிகபட்சமாக 107 காய்கள் இருந்தன. இந்தக் குலையை அப்பகுதி மக்கள் வியப்போடு பார்த்து சென்றனர்.
நன்றாக காய்க்கின்றன
விவசாயி ராஜமணி கூறியதாவது:-
நான் புத்தளம் அரசு தென்னை பண்ணையிலிருந்து 150 குட்டை மற்றும் நெட்டை தென்னங்கன்றுகளை வாங்கி எனது வயலில் 5 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்தேன். நடவு செய்த 3 ஆண்டுகளிலிருந்து தென்னைகள் காய்க்கத் தொடங்கின. அனைத்துத் தென்னைகளும் நன்றாக காய்க்கின்றன.
இதில் ஒரு தென்னை மரத்தில். மட்டும் மிக அதிக எண்ணிக்கையில் காய்கள் காய்க்கின்றன. இதில் ஒரு குலையை அறுவடை செய்து காய்களை எண்ணிப் பார்த்தபோது அதில் 107 காய்கள் இருந்தன. இதில் குறிப்பாக தென்னம்பூங்கொத்தின் (கிலாஞ்சி) ஒரு இதழில் (வள்ளி) மட்டும் அதிக பட்சமாக 7 காய்கள் இருந்தன. 107 காய்கள் என்பது தென்னைகளில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்த வகை தென்னங் காய்கள் இளநீருக்காக மட்டும் பயன்படுத்தப்படும் காய்கள் என்பதால் இவற்றை இளநீருக்காக அறுவடை செய்து விற்று வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.