குரும்பூர் அருகே குளத்தில் மூழ்கி தச்சு தொழிலாளி பலி
குரும்பூர் அருகே குளத்தில் மூழ்கி தச்சு தொழிலாளி பலியானார்.
தென்திருப்பேரை:
குரும்பூர் அருகேயுள்ள கோட்டாறுவிளையைச் சேர்ந்த பரமசிவன் ஆசாரி மகன் பால்குமார் (வயது47). தச்சுத்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு கடம்பா குளம் அருகில் மறுகால் ஓடைப்பக்கம் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு ஆழமான பகுதியை அறியாத அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். இரவு வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தேடிபார்த்துள்ளனர். ஆனால் அவரை பற்றிய தகவல் இல்லை. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் நீண்டநேரம் தேடியும் அவரை பற்றிய தடயம் கிடைக்காமல் திரும்பி சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் குரும்பூர் போலீசாரும், கிராம மக்களும் ஓடைக்கு வரும் தண்ணீரை அடைத்து தேடிபோது, அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரை உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.