குரும்பூர் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன்
குரும்பூர் அருகே தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
தென்திருப்பேரை:
குரும்பூர் அருகே தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் உள்ள சோனகன்விளையை சேர்ந்தவர் முத்து நாடார் (வயது 85). இவருடைய மனைவி ரோஜா. இவர்களுடைய மகன் சுடலைமணி (48). இவர் சென்னையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சமீபத்தில் அவர் ஊருக்கு வந்தார்.
நேற்று முன்தினம் மாலையில் முத்து நாடார் மூச்சு திணறலால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல சுடலைமணி முயன்றுள்ளார். அப்போது தாய் ரோஜா, 'நான் அப்பாவுக்கு கசாயம் போட்டு கொடுத்து சரி செய்து விடுகிறேன்' என்று கூறியுள்ளார்.
அடித்துக்கொலை
கசாயத்தால் காய்ச்சல் குறையாது என்றும், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் எனவும் சுடலைமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தாய், மகனுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுடலைமணி வீட்டில் கிடந்த கம்பால் ரோஜாவை அடிக்க முயன்றார்.
இதை முத்து நாடார் தடுக்க முயன்றார். இதனால் முத்துநாடாருக்கு தலையில் அடி விழுந்துள்ளது. தலையில் பலத்த காயமடைந்த முத்து நாடார் சுருண்டு விழுந்து அதே இடத்தில் இறந்து போனார்.
மகன் கைது
இது தொடர்பாக தகவல் அறிந்த குரும்பூர் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று முத்துநாடாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுடலைமணியை கைது செய்தனர்.