மரக்காணம் அருகே ரூ.27½ லட்சம் கோவில் இடம் அபகரிப்பு
மரக்காணம் அருகே ரூ.27½ லட்சம் மதிப்புள்ள கோவில் இடத்ைத அபகரிப்பு செய்தது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா முன்னூர் கிராமத்தில் ஸ்ரீபூதேவி சமேத அருளாள பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 13 ஏக்கர் 63 செண்ட் இடம் உப்புவேலூர் கிராமத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த கோவில் இடத்திற்கான பட்டா, அதே கிராமத்தை சேர்ந்த வீரப்பன் (60) என்பவருடைய தந்தை சீனிவாசன் பெயரில் தவறுதலாக வந்துள்ளது. இதை தெரிந்திருந்தும் வீரப்பன், அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கோவில் இடத்தை ஜெய்சங்கர் என்பவருக்கு பவர்பத்திரம் எழுதிக்கொடுத்து அந்த இடத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது. அபகரிக்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.27 லட்சத்து 40 ஆயிரமாகும்.
இதுகுறித்து அக்கோவிலின் ஊழியரான முன்னூர் பள்ளிக்கூட வீதியை சேர்ந்த ராமஜெயம் என்பவர், இதுபற்றி விழுப்புரம் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வீரப்பன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.