மயிலாடும்பாறை அருகே பழங்குடியின மக்கள் வீடுகளில் அதிகாரி ஆய்வு
மயிலாடும்பாறை அருகே பழங்குடியின மக்கள் வீடுகளில் அதிகாரி ஆய்வு செய்தார்.
மயிலாடும்பாறை,
மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சியில் தாழையூத்து, உப்புத்துறை ஆகிய கிராமங்களில் பழங்குடியின மக்களுக்கான தொகுப்பு வீடுகள் அமைந்துள்ளது. போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் பெரும்பாலான தொகுப்பு வீடுகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் மழை பெய்யும்போது வீடுகளுக்குள் நீர் கசிவு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை தொடர்ந்து நேற்று மாவட்ட திட்ட இயக்குனர் மதுமதி தாழையூத்து, உப்புத்துறை கிராமங்களுக்கு சென்று பழங்குடியின மக்களின் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டார். வீடுகளுக்குள் சென்று சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட அவர் பழங்குடியின மக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் குறித்து பார்வையிட்டார். ஆய்வின் முடிவில் விரைவில் அனைத்து வீடுகளும் உரிய முறையில் சீரமைக்கப்படும் என்று திட்ட இயக்குனர் கூறினார். இந்த ஆய்வின் போது கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர்கள் இளங்கோவன், அய்யப்பன், ஒன்றிய பொறியாளர்கள் ராமமூர்த்தி, நாகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.