மேலூர் அருகே சூறைக்காற்றுக்கு வாழைகள் சாய்ந்து சேதம்- விவசாயிகள் கவலை


மேலூர் அருகே சூறைக்காற்றுக்கு வாழைகள் சாய்ந்து சேதம்- விவசாயிகள் கவலை
x

மேலூர் அருகே சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மதுரை

மேலூர்

மேலூர் அருகே சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சூறைக்காற்று

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் நேற்று மதுரை மாவட்டம் மேலூர், திருவாதவூர், கழுங்குப்பட்டி, வெள்ளமுத்தன்பட்டி, கொட்டகுடி, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென கருமேகம் சூழ்ந்தது. பின்னர் சிறிது நேரத்தில் லேசான மழை பெய்தது.

நேரம் செல்ல ெசல்ல பலத்த சூறாவளி காற்று மற்றும் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கி நின்றது. மேலும் இந்த சூறைக்காற்றினால் மேலூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

இழப்பீடு வழங்க கோரிக்கை

பூ, காய்களுடன் சில நாட்களில் அறுவடை செய்து விற்பனைக்கு தயாராகி இருந்த வாழை மரங்கள் சேதமடைந்ததால் பல லட்சம் ரூபாய் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விவசாயிகளான புளியம்மாள், பெரியகருப்பன், பாலன் உள்ளிட்டவர்கள் தாங்கள் கூட்டுறவு வங்கியில் பணம் கடனாக பெற்று வாழை விவசாயம் செய்திருந்த நிலையில் தற்போது சூறைக்காற்றுக்கு வாழை சேதமடைந்துள்ளதால் வங்கியில் வாங்கிய கடனை கட்ட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு இழப்பீடு வழங்கி தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story