மெஞ்ஞானபுரம் அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
மெஞ்ஞானபுரம் அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள ஆத்திக்காடு மேலத்தெருவை சேர்ந்த மெய்யழகன் மகன் முத்துக்குமார் (வயது41). இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கும், இவரது மனைவி ஜான்சி விமலாவிற்கும் (வயது32) இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜான்சி விமலா குழந்தைகளுடன் அதே ஊரில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு முத்துக்குமார் தனது மனைவியை சமரசம் பேசி குழந்தைகளுடன் மீண்டும் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அன்று அவரது மனைவி குழந்தையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கூலி வேலைக்கு சென்று விட்டார். முத்துக்குமார் ஆட்டோ ஒட்ட செல்வதாக கூறி வெளியே சென்றார். இந்த நிலையில் முத்துக்குமாரின் தாயார் 100நாட்கள் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டு மாடியில் உள்ள அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது முத்துக்குமார் மேல் கூரை கம்பியில் தூக்கு போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.