மொடக்குறிச்சி அருகேவிவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சுமர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை
மொடக்குறிச்சி அருகே விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மொடக்குறிச்சி அருகே விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பயங்கர சத்தம்
மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் கேட் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 56). விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் தனது தந்தை மற்றும் குடும்பத்தினருடன் தங்கியிருந்து விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த 16-ந் தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முன்பு நள்ளிரவில் வெடி வெடிப்பது போல் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு
இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் முன்புறம் உள்ள கதவில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் முன்பு மர்மநபர்கள் யாரோ வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் மகேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது வீட்டின் முன்பு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து பார்த்தபோது அதிலிருந்து பெட்ரோல் வாசனை வீசியது. எனவே மர்ம நபர்கள் இந்த பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதனை மகேஷ் வீட்டு முன்பு வீசிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் இந்த செயலில் ஈடுபட்டனரா? அல்லது சொத்து பிரச்சினையா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.