நாகலாபுரம் அருகேமானாவாரி நிலத்தில் பொன்ஏர் பூட்டும் விழா
நாகலாபுரம் அருகே மானாவாரி நிலத்தில் பொன்ஏர் பூட்டும் விழா நடைபெற்றது.
எட்டயபுரம்:
நாகலாபுரம் அருகே என்.புதுப்பட்டியில் விவசாயிகள் மானாவாரி நிலத்தில் பொன் ஏர் பூட்டும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் தங்களதுநிலங்களில் ஏர்பூட்டி விவசாய பணியை தொடங்கினர்.
பொன்ஏர் பூட்டும் விழா
தமிழ் வருடப்பிறப்பின் தொடக்கமான சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு நாகலாபுரம் அருகே என்.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள மானாவாரி நிலத்தில் பொன் ஏர் பூட்டும் விழா நடந்தது. கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், தங்களது உழவு மாடுகள் மற்றும் டிராக்டர்களுடன் கிழக்கு பகுதியில் உள்ள வன்னிமரத்தடியில் திரண்டனர்.
அங்கு வீடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த விதைகள், விவசாய கருவிகள் ஆகியவற்றை வைத்து பூஜைகள் செய்தனர்.
சூரிய வழிபாடு
இதில், நல்ல மழை பெய்து, இருபோகம் விளைந்து, நீர்நிலைகள் பெருகி, மகசூல் செழித்து, அனைத்து உயிர்களுக்கும் உணவு தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விளைந்த மகசூலுக்கு உரிய விலை கிடைத்திடவும், கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் கிடைத்திடவும், விவசாய பணியின் போது இயற்கை இடர்பாடுகள் இல்லாமல் இருக்கவும் வேண்டினர். தொடர்ந்து, உழவு காளைகள், டிராக்டர்களுக்கு தீபாரானை நடந்தது. பின்னர் சூரிய வழிபாட்டுடன் கிராம நாட்டாமை ஏ.ஜி.சுப்பையா தலைமையில் கிராம கமிட்டி தலைவர் காசிராஜ் முன்னிலையில் விவசாயிகள் காளைகளுடன் மானாவாரி நிலத்துக்கு சென்று பொன் ஏர் பூட்டி கோடை உழவுப்பணியை தொடங்கினர். தொடர்ந்து ஏராளமான டிராக்டரிலும் விவசாயிகள் உழவுப்பணியை மேற்கொண்டனர்.
வீடுகளில் வரவேற்பு
மாலையில் உழவு முடிந்து வீடு திரும்பிய விவசாயிகளுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து பானக்காரம் வழங்கி வரவேற்பு கொடுத்தனர்.
விழாவில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.