நம்பியூர் அருகே குட்டையில் மூழ்கி பிளஸ்-1 மாணவி சிறுவனுடன் பலி
பிளஸ்-1 மாணவி சிறுவனுடன் பலி
நம்பியூர் அருகே குட்டையில் மூழ்கி பிளஸ்-1 மாணவி சிறுவனுடன் பலியானார்.
கோவில் திருவிழா
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நொச்சிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவருடைய மகள் திலகவதி (வயது 17), புஞ்சைபுளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர்களுடைய உறவினர் புஞ்சைபுளியம்பட்டி ஆலம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் அஸ்வின் (11). நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் நம்பியூர் அருகே உள்ள கே.மேட்டுப்பாளையத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ராம்குமார் மகளுடனும், கிருஷ்ணசாமி மகனுடனும் கே.மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் முருகேசன் என்பவர் வீட்டுக்கு சென்றார்கள்.
குட்டையில் மூழ்கினார்கள்
இந்தநிலையில் நேற்று மாலை திலகவதி, அஸ்வின் ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்-சிறுமிகளுடன் அந்த பகுதியில் உள்ள சிவன் குட்டையில் மீன் பிடிக்க சென்றுள்ளார்கள்.
அப்போது எதிர்பாராத விதமாக திலகவதியும், அஸ்வினும் குட்டையில் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார்கள். இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாக தெரிகிறது.
இதைப்பார்த்த மற்ற குழந்தைகள் பயந்துபோய் செய்வதறியாது வீட்டுக்கு சென்று உறவினர்களிடம் கூறியுள்ளார்கள். உடனே அனைவரும் பதறி அடித்து சிவன் குட்டைக்கு ஓடிவந்தார்கள்.
உடல்கள் மீட்பு
பின்னர் குட்டையில் இறங்கி தேடியபோது திலகவதியையும், அஸ்வினையும் பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இதுபற்றி நம்பியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தைகளின் உடல்களை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது. மேலும் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.