நம்பியூர் அருகே லாரி மோதி பள்ளி மாணவர் பலி
மாணவர் பலி
நம்பியூர் அருகே லாரி மோதி பள்ளிக்கூட மாணவர் பலியானார்.
மாணவர்
நம்பியூரை அடுத்த மின்னக்காட்டுப்பாளையம் புதுக்காலனியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் லோகேஷ் (வயது 14). இவர் பட்டிமணிக்காரன்பாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
சாவு
நேற்று பள்ளி விடுமுறை என்பதால் காலையில் மளிகை கடைக்கு செல்வதற்காக தந்தையின் மொபட்டில் நம்பியூர் நோக்கி லோகேஷ் சென்று கொண்டிருந்தார். பழைய அய்யம்பாளையம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று அவர் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே லோகேஷ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்ததும் நம்பியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லோகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரியை வலைவீசி தேடி வருகிறார்கள். லாரி மோதி பள்ளிக்கூட மாணவர் இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.