பழையகாயல் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; பிளஸ்-2 மாணவர் சாவு


பழையகாயல் அருகே  மோட்டார் சைக்கிள் மீது வேன்   மோதல்; பிளஸ்-2 மாணவர் சாவு
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பழையகாயல் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் இறந்து போனார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

பழையகாயல் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக பலியானார்.

பிளஸ்-2 மாணவர்

ஆத்தூர் கீழரத வீதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவர் நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி ஜெயா. இவர்களது மகன் கிஷோர் (வயது 17).

இவர் பாளையங்கோட்டையிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று காலையில் தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிஷோர் தூத்துக்குடிக்கு சென்றார்.

வேன் மோதியது

பழைய காயல் அருகே உள்ள ராமச்சந்திரபுரம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில இருந்து தூக்கி வீசப்பட்ட கிஷோர் ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்தார். மோதிய வேன் டிரைவர், வேனை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிஷோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் கிஷோர் பரிதாபமாக இறந்து போனார்.

டிரைவருக்கு வலைவீச்சு

இது தொடர்பாக தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடிவருகின்றனர்.


Next Story