ஊஞ்சலூர் அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் சோதனை ஓட்டம்; பொதுமக்கள் எதிர்ப்பு
ஊஞ்சலூர் அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் சோதனை ஓட்டம் நடந்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தொிவித்துள்ளனா்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே இச்சிப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு தொழிற்சாலை அமைக்கப்பட்டதால் நிலத்தடி நீர் மாசுபடும். விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு நடந்த கிராம சபை கூட்டத்திலும் தேங்காய் நார் தொழிற்சாலை அங்கு செயல்பட கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி கலெக்டர், ஆர்.டி.ஓ, தாசில்தார் ஆகியோருக்கு அதை அனுப்பிவைத்தார்கள்.
இந்த நிலையில் தொழிற்சாலையின் நிர்வாகத்தினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று தேங்காய் நார் தொழிற்சாலையில் சோதனை ஓட்டம் நடத்த கொடுமுடி தாசில்தார் உத்தரவிட்டார். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதையடுத்து 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள், 30 போலீசார் பாதுகாப்புடன் ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், பொள்ளாச்சி தேங்காய் நார் தொழிற்சாலைகளின் மண்டல் அலுவலர்கள் சபு, டினு, தயாரிப்பு அலுவலர் தியாகராஜன், பெருந்துறை மாசுக்கட்டுப்பாட்டு உதவிப்பொறியாளர்கள் விஜயகுமார், நந்தினி ஆகியோர் முன்னிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சோதனை ஓட்டத்தை பார்வையிட பொதுமக்கள் தரப்பில் 5 பேர் அழைக்கப்பட்டனர். ஆனால் பொதுமக்கள் சோதனை ஒட்டத்தை பார்வையிடுவதை தவிர்த்து புறக்கணித்தனர். சோதனை ஓட்டம் முடிந்ததும் பொதுமக்களை ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் சந்தித்து பேசினார். அப்போது பொதுமக்கள் ஆலை செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அதற்கு ஆர்.டி.ஓ சதீஷ்குமார் இது சோதனை ஓட்டம்தான் என்று கூறிவிட்டு அதிகாரிகளுடன் சென்றுவிட்டார்.