ஓட்டப்பிடாரம் அருகேமாற்றுத்திறனாளி வாலிபர் தீக்குளித்து தற்கொலை
ஓட்டப்பிடாரம் அருகே மாற்றுத்திறனாளி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால், மாற்றுத்திறனாளி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
உடல் கருகிய நிலையில் வாலிபர் பிணம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை அடுத்த வடக்கு பரும்பூர் பெரியமகிபாலன்குளத்தில் நேற்று காலையில் வாலிபர் ஒருவர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்தவர் உடலின் அருகில் செல்போன், பெட்ரோல் கேன் கிடந்தது. மேலும் அங்கு சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளும் கேட்பாரற்று நின்றது.
மாற்றுத்திறனாளி
இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்தவர் ஓட்டப்பிடாரத்தை அடுத்த வடக்கு பரும்பூரைச் சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (வயது 35) என்பது தெரிய வந்தது. கால் சற்று ஊனமான மாற்றுத்திறனாளியான இவர் வடக்கு பரும்பூரில் பழக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.
செல்போனில் விளையாடியதை கண்டித்ததால்...
இந்த நிலையில் முருகன் பழக்கடையில் சரியாக வியாபாரம் செய்யாமல் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்தனர். நேற்று முன்தினம் காலையில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த முருகனை பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் மனமுடைந்த முருகன் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் பழக்கடைக்கு செல்லவில்லை. இரவிலும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. எனவே அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.
தீக்குளித்து தற்கொலை
இந்த நிலையில் வடக்கு பரும்பூர் பெரியமகிபாலன்குளத்துக்கு சென்ற முருகன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக முருகன் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் சென்று, கேனில் பெட்ரோல் வாங்கி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஓட்டப்பிடாரம் அருகே செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மாற்றுத்திறனாளி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது