ஓட்டப்பிடாரம் அருகே கிராம மக்கள் சாலைமறியலால் பரபரப்பு


ஓட்டப்பிடாரம் அருகே  கிராம மக்கள் சாலைமறியலால் பரபரப்பு
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே கிராம மக்கள் சாலைமறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே மேலவேலாயுதபுரத்தில் சுடுகாட்டுக்கு பாதை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மூதாட்டி சாவு

ஓட்டப்பிடாரம் அருகே மேலவேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மனைவி அழகம்மாள் (வயது 85) நேற்று முன்தினம் இறந்து விட்டார். இதைதொடர்த்து அவரது உடலை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மாலையில் நல்லடக்கம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். அப்போது சுடுகாட்டுக்கு செல்லும் வழியில், அதே கிராமத்தைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது.

சாலைமறியல்

அந்த நிலம் வழியாக மூதாட்டியின் உடலை கொண்டு செல்லக்கூடாது என தனியார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதை கண்டித்தும், சுடுகாட்டுக்கு நிரந்தர பாதை அமைக்க கோரியும் மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் புதியம்புத்தூர் -தூத்துக்குடி சாலையில் மேலவேலாயுதபுரம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் மண்டல துணை தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் சுகுணா, புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு சுடுகாட்டிற்கு செல்ல நிரந்தர பாதை வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து இன்று(திங்கட்கிழமை) ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என அதிாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் சுமார் ஒரு மணி நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story