பண்ருட்டி அருகே சிக்கன் ரைஸ் விலையை குறைத்து கேட்டு ஓட்டலை சூறையாடிய கும்பல் 7 பேர் கைது
பண்ருட்டி அருகே சிக்கன் ரைஸ் விலையை குறைத்து கேட்டு ஓட்டலை சூறையாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காட்டுக்கூடலூரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 51). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு பெரிய காப்பான்குளத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஓட்டல் உரிமையாளர் பன்னீர் செல்வத்திடம் சிக்கன் ரைஸ் விலையை குறைத்து கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பெரியகாப்பான்குளத்தை சேர்ந்தவர்கள் தங்களது ஆதரவாளர்களை செல்போன் மூலம் வரவழைத்தனர். அதன்பேரில் 10-க்கும் மேற்பட்டோர் கத்தி, கட்டை போன்ற ஆயுதங்களுடன் வந்து ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் ஓட்டல் உரிமையாளர் பன்னீர்செல்வத்தையும் அவர்கள் தாக்கினர்.
7 பேர் கைது
இதுகுறித்து பன்னீர்செல்வம் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியகாப்பான்குளத்தை சேர்ந்த கோபால் மகன் இளையராஜா(35), ராமு மகன் தீனா(20), ரவிச்சந்திரன் மகன் ஸ்டாலின்(21), செடுத்தான்குப்பத்தை சேர்ந்த முருகவேல் மகன் ராஜ்குமார்(26), சுபாஷ்(22), குறவன் குப்பத்தை சேர்ந்த பரத்(35), நெய்வேலி 30-வது வட்டத்தை சேர்ந்த சங்கர்(37) ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.