பெரியகுளம் அருகேபலத்த காற்றுடன் பெய்த மழையால் வீடுகள் சேதம்:மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
பெரியகுளம் அருகே பலத்த காற்றுடன் பெய்த மழையால் வீடுகள் சேதமடைந்தன. மேலும் 2 பசுமாடுகள் காயமடைந்தன.
பலத்த காற்றுடன் மழை
பெரியகுளம் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் அவதியடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து இரவு பெரிய குளம் மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பலத்த காற்றும் வீசியது.
இதன் காரணமாக பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டை பகுதியில் ஜெயராஜ் மற்றும் அருகே உள்ள ஜெயக்குமார் என்பவரின் வீட்டின் மீதும் இலவமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் 2 பேரின் வீடுகளும் சேதமடைந்தன. வீட்டின் மீது மரம் விழுந்தபோது ஜெயராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுதாரித்து கொண்டு வெளியேறியதால் அவர்கள் உயிர் தப்பினர்.
வீடுகள் சேதம்
இதேபோல் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரும் மரம் முறிந்து விழுந்த போது உடனே வெளியேறி தப்பினர். வீடு சேதம் அடைந்ததால் அங்கிருந்த பொருட்கள் நாசமாகின. மேலும் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் 2 பசுமாடுகளுக்கு மரம் விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு மாடு கால்நடை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பலத்த காற்று வீசியதால் இ.புதுக்கோட்டை, நேரு நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதமாகின. பல இடங்களில் தேக்கு, இலவம் உள்ளிட்ட மரங்கள் கீழே சாய்ந்து விழுந்தன. இதையடுத்து கனமழையால் சேதமடைந்த பகுதிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், தாசில்தார் காதர்ஷெரீப் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.