பெரியகுளம் அருகே ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் பூட்டை உடைத்து டி.வி. திருட்டு


பெரியகுளம் அருகே  ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் பூட்டை உடைத்து டி.வி. திருட்டு
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே ஓ.பன்னீர்செல்வம் பண்ைண வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் டி.வி.யை திருடி சென்றனர்.

தேனி

பண்ணை வீட்டில் திருட்டு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த வீட்டில் மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டின் கீழ் தளத்தில் இருந்த கதவை உடைக்க முயற்சி செய்தனர். ஆனால் கதவை உடைக்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து படிக்கட்டு வழியாக மாடிக்கு சென்றனர். அங்கு இருந்த அறையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்துள்ளனர். அதில் பொருட்கள் ஏதும் இல்லாததால் ஏமாற்றமடைந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த டி.வி.‌யை மட்டும் திருடி சென்று தப்பி ஓடி விட்டனர்.

போலீசார் விசாரணை

இந்நிலையில் நேற்று காலை காவலாளி வீட்டிற்கு வந்தார். அப்போது மேல் தளத்தில் உள்ள வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக தென்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தேனியில் இருந்து மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணரும் வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியகுளத்திற்கு வரும் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டிற்கு சென்று ஓய்வு எடுப்பதுடன், அங்கு கட்சி ஆலோசனை கூட்டங்கள் மட்டும் நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story