பெரியகுளம் அருகேகல்லாற்றில் மூழ்கி மாணவி பலி
பெரியகுளம் அருகே கல்லாற்றில் மூழ்கி மாணவி பலியானார்.
தேனி அருகே உள்ள அல்லிநகரத்தை சேர்ந்தவர் அன்னப்பராஜா. இவர், சோத்துப்பாறை அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஜீவலட்சுமி (வயது 12). இவர், அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் ஜீவலட்சுமி தனது தந்தையை பார்ப்பதற்காக சோத்துப்பாறைக்கு வந்தார்.
பின்னர் அவர் குடும்பத்துடன் அங்குள்ள கல்லாற்றில் குளிக்க சென்றார். அனைவரும் ஆற்றில் ஆனந்தமாய் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் கிடந்த கற்கள் மற்றும் சேற்று பகுதியில் ஜீவலட்சுமி சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்ட அவரது தந்தை அன்னப்பராஜா மற்றும் அருகே குளித்து கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்