பெருந்துறை அருகேதம்பதியிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் பெண் கைது
பெருந்துறை அருகே தம்பதியிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்டாா்.
பெருந்துறை அருகே உள்ள சரளை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ரங்கநாயகி. இந்த தம்பதிகளுக்கு திருப்பூர் மாவட்டம் வேலப்பகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 43), இவருடைய சகோதரர் விஜயகுமார் (41), இவரது மகன் ராகுல் பாலாஜி (19), உதவியாளர் பிரவீனா (36) மற்றும் தாராபுரத்தை சேர்ந்த உதயக்குமார் ஆகியோர் அறிமுகமாகினர். பின்னர் அவர்கள் ரங்கநாயகியிடம், 'தொழில் செய்வதற்கு வீடு, நிலங்களை அடமானம் வைத்து கடன் வாங்கி தருவதாகவும், புதிதாக தொடங்கும் தொழிலுக்கு பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாகவும் கூறி உள்ளனர்.
இதை உண்மை என நம்பி ரங்கநாயகியும், அவருடைய கணவரும், கடந்த 2018-ம் ஆண்டு தங்களுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தின் பத்திரத்தை சிவக்குமார், விஜயகுமார், ராகுல்பாலாஜி, பிரவீனா, உதயக்குமாரிடம் வழங்கி உள்ளனர். இந்த பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.1 கோடியே 50 லட்சம் பெற்றுக்கொண்டு 5 பேரும் தலைமறைவாகினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவக்குமார், உதயக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக தேடப்பட்டு வந்த பல்லடத்தை சேர்ந்த பிரவீனா (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள விஜயக்குமார், ராகுல் பாலாஜியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.