பெருந்துறை அருகேகிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை
பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்துகொண்டாா்.
பெருந்துறை சீனாபுரம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 75). விவசாயியான இவர் கடந்த 5 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணசாமி நேற்று முன்தினம் மதியம் அவருக்கு சொந்தமான பூந்தோட்டத்துக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள 120 ஆழமுடைய தண்ணீர் இல்லாத திறந்தவெளி கிணற்றை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரிடம் கிணற்றை நோக்கி செல்லாதீர்கள் என கூறிக்கொண்டே பின்னால் ஓடிவந்தனர். ஆனால் அவர்களது கண் முன்னே கிருஷ்ணசாமி கிணற்றுக்குள் குதித்துவிட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே இதுபற்றி உறவினர்கள் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு கயிற்றை கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்கி கிருஷ்ணசாமியை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவக்கல்லூரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு கிருஷ்ணசாமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.