பெருந்துறை அருகே கன்டெய்னர் லாரி மீது பஸ் மோதல்; டிரைவர் உள்பட 2 பேர் பலி
பெருந்துறை அருகே கன்டெய்னர் லாரி மீது பஸ் மோதியதில் டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 10 பேர் காயம் அடைந்தனர்.
பெருந்துறை
பெருந்துறை அருகே கன்டெய்னர் லாரி மீது பஸ் மோதியதில் டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 10 பேர் காயம் அடைந்தனர்.
லாரி மீது மோதல்
சென்னையில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சியை நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சை காஞ்சீபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 55) என்பவர் ஓட்டினார்.
அந்த பஸ் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டை அடுத்த தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் காலை 6 மணி அளவில் சென்ற போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.
டிரைவர் சாவு
இந்த விபத்தில் பஸ்சின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் இந்த விபத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பஸ்சின் டிரைவர் பாலமுருகன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் விபத்தில் பஸ்சில் வந்த திருப்பூர் மாவட்டம் பல்லடம் லட்சுமி நகரை சேர்ந்த ஜான் நேசன் (28), அவருடைய மனைவி ஜெனி (26), மனோஜ் (27), உடுமலையை சேர்ந்த ஸ்ரீ வித்யா (28), நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த டேவிட் ராஜ் (50), ஜான்சி மேரி (30), குருசம்மா (46), உமேஷ் (12), சென்னை சோலையூரை சேர்ந்த பூங்கொடி (46), திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த ஆதர்ஷ் (26), ராமாயி (65) ஆகிய 11 பேர் காயம் அடைந்தனர்.
10 பேர் காயம்
இதில் படுகாயம் அடைந்த ஜான் நேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜான் நேசன் பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த மற்ற 10 பேர் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் ேசாகத்தை ஏற்படுத்தி உள்ளது.