பெருந்துறை அருகே ரூ.5¾ கோடியில் சாலை விரிவாக்க பணி; கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு
பெருந்துறை அருகே ரூ.5¾ கோடியில் நடைபெறும் சாலை விரிவாக்க பணியை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தாா்.
பெருந்துறை அருகே ரூ.5¾ கோடி செலவில் சாலை விரிவாக்க பணியை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வு
பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையத்துக்குட்பட்ட ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பில் நடந்துவரும் காத்திருப்பு அறை, பெருந்துறை சீனாபுரம் பகுதியில் ரூ.11 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.5 கோடியை 70 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பில் சீனாபுரத்தில் சாலை விரிவாக்க பணி உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று பெருந்துறை பகுதிக்கு சென்ற மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் சாலை விரிவாக்க பணியை ஆய்வு செய்த அவர் அங்கிருந்த ெநடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சாலைகளின் தரம், எவ்வளவு அகலத்தில் சாலை அமைக்கப்படுகிறது, எவ்வளவு ஆழத்தில் ஜல்லிகள், கற்கள் போட்டு சாலை அமைக்கப்படுகிறது என்று கேட்டு அறிந்தார். மேலும் சாலை அமைக்கப்படும் ஆழத்தை அங்கு உள்ள அதிகாரி மூலம் அளந்தும் பார்த்தார். சாலை தரமானதாக இருப்பதுடன், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவர வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இயற்கை உரம்
இதனைத்தொடர்ந்து சீலம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்துகளின் இருப்புகள் விவரத்தையும் டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார். அதுமட்டுமின்றி அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளிடமும் நலம் விசாரித்தார். பின்னர் துடுப்பதி பகுதியில் இயற்கை உரம் தயாரிக்கும் மையம் மற்றும் பிளாஷ்டிக் கழிவுகளை அரைக்கும் எந்திரத்தையும், மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பெருந்துறை தாசில்தார் பூபதி உள்பட பலர் உடன் இருந்தனர்.