பெருந்துறை அருகேகாதல் மனைவியை கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை
பெருந்துறை அருகே காதல் மனைவியை கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
பெருந்துறை அருகே காதல் மனைவியை கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
காதல் திருமணம்
கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் பழைய பஸ் நிலையரோடு பகுதியை சேர்ந்தவர் நிவேதா என்கிற நிவேதிதா (வயது 19). இவரது வீட்டுக்கு அருகில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜெயராமனின் மகன் முனியப்பா (வயது 28) என்பவர் தங்கியிருந்தார். அவர் அங்கு ஆட்டோ டிரைவராக இருந்தார். முனியப்பாவுக்கும், நிவேதிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர்கள் 2 பேரும் திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு முனியப்பாவும், நிவேதிதாவும் ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். முனியப்பா அங்குள்ள ஒரு கியாஸ் கம்பெனியில் டிரைவராக வேலை செய்தார். நிவேதிதா வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை செய்து வந்தார். நிவேதிதா அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருந்ததால், அவர் மீது முனியப்பாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
தலை துண்டிப்பு
கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முனியப்பா வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரது வீடு வழியாக மர்மநபர் ஒருவர் சென்றார். வீட்டுக்குள் சென்றபோது நிவேதிதா உடை மாற்றிக்கொண்டு இருந்தார். இதனால் முனியப்பாவுக்கு சந்தேகம் அதிகரித்தது. அவர் இதுபற்றி கேட்டதால், கணவன்-மனைவிக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பிறகு நிவேதிதாவிடம் கர்நாடகாவுக்கு கொண்டு சென்று விடுவதாக கூறி முனியப்பா அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு சென்றார். பெருந்துறை அருகே வாவிக்கடை எருக்காட்டுவலசு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு நிவேதிதாவை அவர் அழைத்து சென்றார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நிவேதிதாவை இறக்கிவிட்டார். அப்போது முனியப்பா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நிவேதிதாவின் கழுத்தில் வெட்டினார். இதில் அவரது தலை துண்டானது.
ஆயுள் தண்டனை
கொலை செய்யப்பட்ட நிவேதிதாவின் உடலையும், அவரது தலையையும் எடுத்து கொண்டு கீழ்பவானி வாய்க்காலில் வீசுவதற்கு முனியப்பா திட்டமிட்டார். ஆனால் அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் உடலை அங்கேயே போட்டுவிட்டு முனியப்பா தப்பி ஓடினார்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்த முனியப்பாவை கைது செய்தனர். மேலும் அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினாா். அதில் அவர், மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக முனியப்பாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.