கம்பம் அருகேகுப்பைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள்
கம்பம் அருகே குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
கம்பம் அருகே ஏராளமான ஓடைகள் உள்ளன. இந்த ஓடைகள் கம்பம் சின்னவாய்க்கால் மற்றும் குளங்களுக்கு சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டன. ஓடைகளில் தண்ணீர் வரும் போது நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனை நம்பி விவசாயிகள் தென்னை, வாழை உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர். இதேபோல் ஏகலூத்து பகுதி மலையடிவாரத்தில் இருந்து மஞ்சக்குளம் சின்னவாய்க்காலை சென்றடையும் பைத்தியக்காரன் ஓடை ஆங்கூர்பாளையம் சாலையை கடந்து செல்கிறது.
இந்நிலையில் இந்த ஓடையில் நேற்று கட்டுமான கழிவுகள் மற்றும் குப்பைகளை மர்மநபர்கள் கொட்டி தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனர். எனவே ஓடையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.