புதுக்கோட்டை அருகேவீட்டில் சிலிண்டர் வெடித்து காயம் அடைந்த வாலிபர் சாவு


புதுக்கோட்டை அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து காயம் அடைந்த வாலிபர் சாவு

தூத்துக்குடி

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

வாலிபர்

புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தல் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 25). கடந்த மாதம் 17-ந் தேதி இவரது தாய் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் வீட்டில் வெந்நீர் போட்டு உள்ளார். பின்னர் தாயை ஆஸ்பத்திரிக்கு அவசரமாக அழைத்து சென்று விட்டாராம். அப்போது அடுப்பில் வெந்நீர் வைத்ததை அணைக்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதில் தண்ணீர் சிந்தி அடுப்பு அணைந்ததாகவும், அதே நேரத்தில் கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியேறி அறை முழுவதும் பரவி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சாவு

இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டுக்கு வந்த முத்துக்குமார் வீட்டில் மின்விளக்கு சுவிட்சை போட்டாராம். அப்போது சுவிட்சில் இருந்து வந்த தீப்பொறியால் வீட்டில் பரவி இருந்த கியாஸ் தீப்பற்றி சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர் இடிந்து சேதம் அடைந்தது.

அதேபோன்று முத்துக்குமாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story