புஞ்சைபுளியம்பட்டி அருகே கண்காணிப்பு கேமரா கடையில் திருடிய டிரைவர் சிக்கினார்
புஞ்சைபுளியம்பட்டி அருகே கண்காணிப்பு கேமரா கடையில் திருடிய டிரைவர் சிக்கினார்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மல்லியம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் புஞ்சைபுளியம்பட்டி சத்தியமங்கலம் ரோட்டில் கண்காணிப்பு கேமரா விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கண்ணதாசன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி இரவு கண்ணதாசன் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை முடித்துவிட்டு கடையின் கதவை திறந்து வைத்து விட்டு உள்ளேயே படுத்து தூங்கிவிட்டார்.
மறுநாள் அதிகாலை கடைக்குள் புகுந்த மர்மநபர், உள்ளேயிருந்த செல்போன் மற்றும் எலக்ட்ரீசியன் உபகரணங்கள் அடங்கிய 2 பெட்டிகளை திருடிவிட்டு தப்பித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று பவானிசாகர் ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் கோவை மாவட்டம் சின்ன கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த தாமரைசெல்வன் (வயது 28) என்பதும், லாரி டிரைவரான இவர் தான் ஜெயக்குமாரின் கடையில் புகுந்து திருடியதும், அவற்றை சின்ன கள்ளிபட்டியில் உள்ள மெக்கானிக் பட்டறையில் மறைத்து வைத்து இருந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து திருடிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.