புஞ்சைபுளியம்பட்டி அருகேதோட்டத்துக்குள் புகுந்து 2 யானைகள் அட்டகாசம்; 600 வாழைகள் சேதம்


புஞ்சைபுளியம்பட்டி அருகேதோட்டத்துக்குள் புகுந்து 2 யானைகள் அட்டகாசம்; 600 வாழைகள் சேதம்
x

600 வாழைகள் சேதம்

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சொலவனூர் கோழி பண்ணை தோட்டத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 62). விவசாயி. இவரது வீட்டையொட்டி அவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு அவர் 2 ஏக்கர் பரப்பளவில் வாழைகளையும், ஒரு ஏக்கரில் தர்பூசணி மற்றும் தென்னங்கன்றுகளையும் சாகுபடி செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் வெளியேறின. பின்னர் அவை வெங்கடாசலத்தின் வாழை தோட்டத்தில் புகுந்தன. அதன்பின்னர் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைக்குருத்துக்களை தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்தின. சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த வெங்கடாசலம் திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் அவர் வெளியே வந்து பார்த்தார். அப்போது 2 யானைகள் நின்று கொண்டிருப்பதை பார்த்து அச்சமடைந்து வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

அதைத்தொடர்ந்து தர்பூசணி தோட்டத்துக்குள் யானைகள் சென்றன. அங்குள்ள தர்பூசணி பழங்களை துதிக்கையால் பறித்து தின்றன. அதன்பின்னர் அருகே உள்ள தென்னந்தோப்புக்குள் புகுந்தன. அங்கு சாகுபடி செய்திருந்த தென்னங்குருத்துக்களை தின்றும், தென்னங்கன்றுகளை காலால் மிதித்தம் நாசப்படுத்தின. பின்னர் அங்கும் இங்கும் சுற்றி திரிந்த யானைகள் சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு காட்டுக்குள் சென்றன.

இந்த நிலையில் வெங்கடாசலம் நேற்று காலை தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது யானைகளால் 600 வாழைகளும், ½ ஏக்கர் பரப்பளவிலான தர்பூசணிகளும், 12 தென்னங்கன்றுகளும் சேதப்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானிசாகர் வனத்துறையினர் அங்கு வந்து சேதமான பயிர்களை பார்வையிட்டு சென்றனர்


Next Story