புஞ்சைபுளியம்பட்டி அருகே கம்பி வேலியை சேதப்படுத்திய காட்டு யானைகள்
புஞ்சைபுளியம்பட்டி அருகே கம்பி வேலியை காட்டு யானைகள் சேதப்படுத்தின.
பவானிசாகர் அருகே வனப்பகுதியையொட்டி உள்ள அண்ணா நகர், இரட்டை சாலை பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது. இந்த பகுதியில் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு 2 காட்டு யானைகள் வெளியேறி, பவானிசாகர் சாலைக்கு வந்தது. பின்னர் குப்பை கிடங்கு பகுதிக்கு வந்த யானைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை இடித்து தள்ளி சேதப்படுத்தியது. இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யானைகளை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட அகழிகள் ஆழமாக இல்லாமல் மண் மூடி கிடக்கிறது. எனவே மீண்டும் அகழி வெட்ட வேண்டும். மேலும் அடர்ந்த வனப்பகுதிக்குள் யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றனர்.