ராமநத்தம் அருகே தற்காலிக சாலையில் தடுமாறும் வாகன ஓட்டிகள் பாலம் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
ராமநத்தம் அருகே தற்காலிக சாலையில் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். ஆகவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே தொழுதூரில் இருந்து வைத்தியநாதபுரம் வழியாக ஆத்தூருக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தொழுதூரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தொழுதூருக்கும்- வைத்தியநாதபுரத்திற்கும் இடையே தனியார் கல்லூரிக்கு அருகில் ஆனைவாரி ஓடை உள்ளது. இந்த ஓடைக்கு குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த தரைப்பாலம் சேதமடைந்து காணப்பட்டதால், தற்போது புதிய பாலம் கட்டும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
தடுமாறும் வாகன ஓட்டிகள்
இருப்பினும் பொதுமக்கள் சென்று வர வசதியாக அதன் அருகில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை தரமற்றதாக இருப்பதால், குண்டும், குழியுமாக காணப்பட்டது. அதில் வாகன ஓட்டிகள் சென்று வர மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மழை பெய்தால் இந்த சாலையில் வாகனங்கள் சென்று வர முடியாது.
இந்நிலையில் நேற்று தொழுதூர் பகுதியில் கன மழை பெய்தது. இதனால் அந்த சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதன் காரணமாக அந்த தற்காலிக சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தடுமாறி வருகின்றனர். சேற்றில் இரு சக்கர வாகனம், ஆட்டோ போன்ற வாகனங்கள் சிக்கி கொள்கின்றன. அவற்றை கீழே இறங்கி தள்ளி விடும் நிலை ஏற்பட்டது.
விரைந்து முடிக்க வேண்டும்
பள்ளி, கல்லூரி வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். அதுவரை தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலையை வாகனங்கள் சென்று வரும் அளவுக்கு தரமாக அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.