சாத்தான்குளம் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


சாத்தான்குளம் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:37+05:30)

சாத்தான்குளம் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே வடக்கு பன்னம்பாறை கிராமத்தின் தென்பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதில் இருந்து அப்பகுதியில் உள்ள 50 கிணற்று பாசன விவசாய நிலங்களுக்கு இந்த டிரான்ஸ்பார்மர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் பன்னம்பாறை கிராமத்திற்கு சொந்தமான மூன்று கோவில்களுக்கும் இங்கிருந்து தான் மின்சப்ளை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் டிரான்ஸ்பார்மரில் மாதாந்திர பராமரிப்பு பணி நடந்தது. இப்பணி முடிந்த நிலையில் மாலையில் மின்ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரை இயக்கிவிட்டு சென்றுள்ளனர். சிறிதுநேரத்தில் டிரான்ஸ்பார்மரிலுள்ள ஒயர் ஒன்று அறுந்து விழுந்து, ஆயில் கசிந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். டிரான்ஸ்பாரிலிருந்து மின்வினியோகம் தடைபட்டது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் டிரான்ஸ்பார்மர் தீ அணைக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் அங்கு வந்த சாத்தான்குளம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவி, உதவி பொறியாளர் எட்வர்ட், மற்றும் மின்வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரை ஆய்வு செய்து மராமத்து பணியில் ஈடுபட்டனர். இப்பணி முடிந்து நேற்று காலையில் டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்வினியோகம் நடந்தது. இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை மின்தடை ஏற்பட்டதால், அப்பகுதி மின்மோட்டார்களை இயக்க முடியாமல் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி பாதிக்கப்பட்டு, விவசாயிகள் அவதிக்குள்ளாகினர்.


Next Story