சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; கூரியர் ஊழியர் பலி


சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிக்கொண்ட விபத்தில் கூரியர் ஊழியர் பலியானார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆனந்தபுரம் கீழத்தெருவை சேர்ந்த ரத்தினம் மகன் வெள்ளப்பாண்டி(வயது42). இவர் நாசரேத்திலுள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று மாலையில் ஆனந்தபுரத்தில் இருந்து பழங்குளத்துக்கு மனைவி ரேவதியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நாசரேத் பிள்ளையன்மனை புனிதராஜா மனைவி ஏஞ்சல்(32) என்பவர் மொபட்டில் வந்து கொண்டிருந்துள்ளார். சாத்தான்குளம் அருகே எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளும், மொபட்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்தில் வெள்ளப்பாண்டி உயிரிழந்தார். மனைவி ரேவதி லேசான காயத்துடன் தப்பினார். ஏஞ்சல் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story