சாத்தான்குளம் அருகேவாலிபர் தூக்குபோட்டு தற்கொலை


சாத்தான்குளம் அருகேவாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:45 PM GMT)

சாத்தான்குளம் அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமண ஆசை

சாத்தான்குளம் அருகிலுள்ள அம்பலச்சேரி வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் அய்யம்பெருமாள் (வயது 23). கூலித்தொழிலாளியான இவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தந்தை முருகனிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் மூத்த சகோதர்களுக்கு திருமணம் முடித்து விட்டு, அய்யம்பெருமாளுக்கு திருமணம் முடித்து வைப்பதாக தெரிவித்தாராம்.

உறவினருக்கு தகவல்

இதை ஏற்க மறுத்த அவர் தனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்குமாறு தந்தையிடம் வற்புறுத்தியுள்ளார். அவரது தந்தை திருமணத்துக்கான ஏற்பாடு செய்யாததால், விரக்தி அடைந்த அய்யம் பெருமாள் நேற்று முன்தினம் செல்போனில் உறவினர் ஒருவரிடம் பேசியுள்ளார். அப்போது தனக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யாததால், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு, இணைப்பை துண்டித்து விட்டாராம்.

தூக்கில் தொங்கினார்

பதறிப்போன அவர், அய்யம்பெருமாளின் தந்தை முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரும், குடும்பத்தினரும் அய்யம்பெருமாளை தேடியுள்ளனர். அப்போது வீட்டிலுள்ள ஒரு அறையில் அய்யம் பெருமாள் சேலையில் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை உறவினர்களும், குடும்பத்தினரும் மீட்டு நாசரேத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.அவரது உடலைபார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story