சத்தியமங்கலம் அருகே துதிக்கையால் குழாயை திறந்து தண்ணீர் குடித்த காட்டு யானை
சத்தியமங்கலம் அருகே துதிக்கையால் குழாயை திறந்து காட்டு யானை தண்ணீர் குடித்தது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் காணப்படுகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி உள்ள விளைநிலங்கள் மற்றும் கிராமங்களுக்கு யானைகள் அவ்வப்போது புகுந்து விடுகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று ெவளியேறி உள்ளது. பின்னர் அந்த காட்டு யானை சத்தியமங்கலத்தை அடுத்த புதுக்குய்யனூர் கிராமத்துக்குள் புகுந்தது. அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயை காட்டு யானை கண்டது. உடனே அந்த குடிநீர் குழாயின் அருகில் காட்டு யானை சென்றது. பின்னர் குடிநீர் குழாயை லாவகமாக துதிக்கையால் திறந்தது. அப்போது அதில் இருந்து வந்த தண்ணீரை துதிக்கையால் உறிஞ்சி தண்ணீர் குடித்தது. இதை அங்கிருந்த ஒரு சிலர் தங்களுடைய செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். தாகம் தீர்ந்ததும் காட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.