சத்தி அருகே கீழ்பவானி வாய்க்கால் உடைப்பை சரிசெய்யும் பணி தீவிரம்


சத்தி அருகே  கீழ்பவானி வாய்க்கால் உடைப்பை சரிசெய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 1 Nov 2022 1:00 AM IST (Updated: 1 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

கீழ்பவானி வாய்க்கால்

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்கால் உடைப்பை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வாய்க்கால் உடைப்பு

கீழ்பவானி வாய்க்காலில் சத்தியமங்கலத்தை அடுத்த தங்க நகரம் என்ற பகுதிக்கு கிளை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த கிளை வாய்க்காலில் தண்ணீர் செல்லும் பகுதியில் நேற்று முன்தினம் திடீரென அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் மளமளவென சென்றது. மேலும் வாய்க்காலின் மேற்பகுதியில் 6 அடி விட்டம் உள்ள அளவுக்கு பெரிய குழியும் ஏற்பட்டது.

இதனிடையே குழி பெரிதாகி உடைப்பு ஏற்படாமல் இருக்க முதல் கட்டமாக கிளைவாய்க்கால் அடைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பதும் நிறுத்தப்பட்டது.

பணிகள் தீவிரம்

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ பகுதிக்கு பொதுப்பணித்துறை நிர்வள பிரிவு பொறியாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்ததுடன், உடைப்பு ஏற்பட்ட இடத்தை அடைப்பது குறித்து ஆலோசனையும் நடத்தினர். பவானிசாகர் அணையில் இருந்து வரும் தண்ணீர் முழுவதும் குறைந்த பின்னர்தான் இந்த பணியை தொடங்க முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி ஏராளமான மணல் மூட்டைகள் அந்த பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் பொறியாளர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் மதகு பகுதி முழுவதுமாக உடைக்கப்பட்டது. மேலும் குழி விழுந்த பகுதி பெரிதாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது புதிதாக மதகு அமைத்து மற்றும் கிளை வாய்க்காலுக்கு செல்ல கான்கிரீட் தளம் அமைத்து அதன் மீது குழாய் வைத்து தண்ணீர் வசதி செய்து கொடுக்கவும் திட்டம் போட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


Next Story