சத்தி அருகே சிறுத்தை அட்டகாசம்; நாயை கொன்றது


சத்தி அருகே  சிறுத்தை அட்டகாசம்; நாயை கொன்றது
x

சிறுத்தை அட்டகாசம்

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே மலையடிவாரத்தில் உள்ள புதுப்பீர்கடவு கிராமத்தை சேர்ந்தவர் தவமணி. விவசாயி. இவரது வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. இங்கு அவர் காவலுக்காக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு நாய் இறந்து கிடந்தது.

உடனே இதுபற்றி சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று இறந்து கிடந்த நாயை பார்த்தனர். பின்னர் நாயின் உடல் அருகே பதிவான கால் தடத்தை பார்த்து அது சிறுத்தையின் கால்தடம் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை தவமணியின் தோட்டத்துக்குள் புகுந்து அங்கு நின்றிருந்த நாயை கடித்து கொன்றுள்ளது. நாயின் இறைச்சியில் பாதியை தின்றுவிட்டு மீதியை அப்படியே அங்கேயே போட்டுவிட்டு வனப்பகுதிக்குள் சென்று இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூறும்போது, 'கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் ஆடுகளையும், கன்றுக்குட்டிகளையும், நாய்களையும் சிறுத்தை கொன்று வருகிறது. 10 நாட்களுக்கு முன்பு சிறுத்தை கன்றுக்குட்டி ஒன்றை வேட்டையாடியது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே உடனே சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும்' என்றனர்.


Next Story