சங்கராபுரம் அருகே டாக்டர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சங்கராபுரம் அருகே  டாக்டர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் கொள்ளை  மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே டாக்டர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடமாமாந்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் நாகராஜ் (வயது 31). டாக்டரான இவர், மேல்சிறுவள்ளூரில் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராஜேந்திரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை நாகராஜ், தனது மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நாகராஜ், வடமாமாந்தூரில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன.

ரூ.3 லட்சம்

மேலும் பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்ததுடன் அதில் வைத்திருந்த 4 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி, ரூ.1½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

இதையடுத்து தடயவியல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டை மோப்பம்பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

டாக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story