ஸ்பிக்நகர் அருகே, சீரான மின்சாரம் வழங்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ஸ்பிக்நகர் அருகே, சீரான மின்சாரம் வழங்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி-திருச்செந்தூர் மெயின் ரோடு பகுதியில் ஸ்பிக் நகர் அருகே பேக்கரியை ஒட்டியுள்ள டிரான்ஸ்பார்மரில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதனால் பாரதிநகர் 1, 2, 3, 4, 5, ஆகிய 5 தெருக்களுக்கு நள்ளிரவில் இருந்து மின்வினியோகம் தடைப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் சுயம்பு தலைமையில் நேற்று மாலையில் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டபனர். தகவல் அறிந்து அங்கு வந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பகுதிக்கு உடனடியாக மின்வினியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று போலீசார் உறுதியளித்ததை ஏற்று மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்துசென்றனர். இதனால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.