தாளவாடி அருகே மேய்ந்து கொண்டிருந்த மாட்டை புலி அடித்து கொன்றது
மாட்டை புலி அடித்து கொன்றது
தாளவாடி அருகே மேய்ந்து கொண்டிருந்த மாட்டை புலி அடித்து கொன்றது.
அட்டகாசம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சில சமயங்களில் புலி மற்றும் சிறுத்தைகள் வனப்பகுதியையொட்டிய கிராமப்பகுதிக்குள் புகுந்து தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆடு, மாடுகளையும் வேட்டையாடி வருகிறது.
இந்தநிலையில் நேற்று புலி மாடு ஒன்றை அடித்துக்கொன்றது. அதன் விவரம் வருமாறு:-
தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரசுவாமி (வயது 49). விவசாயி. இவர் தனது வீட்டில் 4 மாடுகள் வளர்த்து வருகிறார். இவருக்கு வனப்பகுதியையொட்டி தோட்டம் உள்ளது. இங்கு அவர் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
இறந்து கிடந்த மாடு
அதேபோல் கங்காதரசுவாமி நேற்று காலை வழக்கம் போல் மாடுகளை தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் மதியம் மாடுகளை வீட்டுக்கு ஓட்டி வர சென்றார்.
அப்போது அங்கு ஒரு பசு மாடு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் அருகே புலியின் கால்தடம் பதிவாகி இருந்தது. தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை வனப்பகுதியில் இருந்து வந்த புலி அடித்து கொன்றது தெரியவந்தது.
புலியின் கால்தடம்
சம்பவ நடந்த இடம் தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள வனப்பகுதியாகும். எனவே விவசாயி இதுபற்றி தாளவாடி மற்றும் கர்நாடக மாநில வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து தாளவாடி வனத்துறையினர் அங்கு சென்று இறந்து கிடந்த மாட்டை பார்வையிட்டனர். பின்னர் அருகே உள்ள கால்தடத்தை பார்த்து புலி தான் என்பதை உறுதி செய்தனர்.
அப்போது விவசாயி வனத்துறையினரிடம் புலி அடித்துக்கொன்ற தனது மாட்டுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என முறையிட்டார்.