தாளவாடி அருகே ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி
தாளவாடி அருகே ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது.
தாளவாடி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான சிறுத்தைப்புலிகள் உள்ளன. அடிக்கடி சிறுத்தைப்புலிகள் காட்டைவிட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. அவ்வாறு நுழையும் சிறுத்தைகள் பட்டியில் அடைத்து வைத்து இருக்கும் ஆடு, மாடுகளை வேட்டையாடுகின்றன.
தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட ராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 39). விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் பட்டி அமைத்து ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை ஆடு, மாடுகளை பட்டியில் கட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு தூங்க சென்று விட்டார். ேநற்று அதிகாலை பட்டிக்கு வந்து பார்த்தார்.
அப்போது ஒரு ஆட்டை காணவில்லை. சுற்றும், முற்றும் தேடிப்பார்த்தார். அப்போது பட்டியில் இருந்து சிறிது தூரத்தில் கடித்து குதறப்பட்டு நிலையில் ஆட்டின் உடல் கிடந்தது. வனப்பகுதியில் இருந்து வௌியேறிய ஏதோ ஒரு மர்ம விலங்கு நேற்று முன்தினம் இரவு பட்டிக்கு வந்து ஆட்டை கடித்து குதறி வேட்டையாடி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து தாளவாடி வனத்துறைக்கு நாகராஜ் தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். ஆட்டின் உடல் கிடந்த இடத்தில் பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர்.
அதன்பின்னர் வனத்துறையினர் கூறும்போது, 'ஆட்டை கடித்து கொன்றது சிறுத்தைப்புலி' என்று உறுதி செய்தனர். இதனால் அச்சமடைந்துள்ள விவசாயிகள் கூண்டு வைத்து உடனே சிறுத்தைப்புலியை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.