தாளவாடி அருகே வனப்பகுதியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
தாளவாடி அருகே வனப்பகுதியில் அரசு பஸ் பழுதாகி நின்றது.
தாளவாடி
தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு தாளவாடியில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ் மூலமாக சென்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று 3 மணி அளவில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சென்றுகொண்டு இருந்தது.
தமிழக-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் அருகே செல்லும்போது அடர்ந்த வனப்பகுதியில் பஸ் திடீரென பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் பரிதவித்தார்கள். ஒரு மணி நேரம் கடந்த பின்னர் தாளவாடியில் இருந்து குளியாடா சொல்லும் அரசு பஸ் அந்த வழியாக வந்தது. அதில் பயணிகள் ஏற்றப்பட்டு சத்தியமங்கலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபற்றி பயணிகள் கூறும்போது, மலைப்பகுதியில் பழைய பஸ்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. எனவே நல்ல நிலையில் இருக்கும் பஸ்களையே இயக்க வேண்டும் என்றார்கள்.