தாளவாடி அருகேசிறுத்தை தாக்கி மாடு பலி
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி மாடு பலி ஆனதால் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
தாளவாடி
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி மாடு பலி ஆனதால் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
10 வனச்சரகங்கள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், ஜீர்கள்ளி உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி மற்றும் சிறுத்தைகள் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை கடித்து கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.
கடித்து கொன்றது
குறிப்பாக கடந்த 1 ஆண்டாக தாளவாடி அருகே உள்ள சேஷன் நகர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும், 10-க்கும் மேற்பட்ட நாய்களையும் கடித்து ெகான்று உள்ளது. இந்த புலியானது கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறி கால்நடைகளை கடித்து கொன்று வந்தது.
கண்காணிப்பு கேமரா மூலம் புலியின் நடமாட்டத்தை அறிந்து கொண்ட தாளவாடி வனத்துறையினர் இதுபற்றி கர்நாடக மாநில வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அட்டகாசம் செய்து வரும் புலிைய கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கூண்டு வைத்து பிடிக்க...
இந்த நிலையில் தாளவாடி அருகே கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்து மாட்டை கடித்து கொன்ற சம்பவம் நடந்து உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
தாளவாடியை அடுத்த ஓசூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் வாசிப் (வயது 56). இவர் 7 மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று அப்துல் வாசிப்பின் மாடு ஒன்றை கடித்து கொன்றது. வழக்கம்போல் நேற்று காலையில் அப்துல் வாசிப் எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டில் கட்டப்பட்டிருந்த மாட்டை காணவில்லை. இதனால் அவர் சுற்றும் முற்றும் தேடி பார்த்தார். அப்போது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் வயிற்றில் கடிபட்ட நிலையில் அவருடைய மாடு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனச்சரகர் சதீஸ் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மாட்டை பார்த்தனர். பின்னர் அந்த பகுதியில் பதிவான கால் தடயங்களை பார்வைவிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தையின் கால் தடம் என தெரியவந்தது. எனவே மாட்டை சிறுத்தை கடித்து கொன்று உள்ளது என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். சேஷன் நகருக்கும், ஓசூருக்கும் இடையே உள்ள தூரம் 1 கிலோ மீட்டர் தூரம் ஆகும்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சேஷன் நகர் பகுதியில் 3 பசு மாடுகளை புலியும், ஓசூர் பகுதியில் 1 பசு மாட்டை சிறுத்தையும் கடித்து கொன்று உள்ளது. புலி மற்றும் சிறுத்தை என மாறி மாறி கால்நடைகளை கொன்று வருவது அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே புலி மற்றும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.