தாளவாடி அருகே தோட்டத்துக்குள் தாவி குதித்த சிறுத்தைப்புலி
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் சிறுத்தைப்புலி தாவி குதித்தது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்குட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, காட்ெடருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் காணப்படுகின்றன. இதில் புலி மற்றும் சிறுத்தைப்புலி, வனப்பகுதியையொட்டி உள்ள கிராமம், தோட்டங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகளை கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி ஒன்று ராமாபுரம் பகுதியில் உள்ள தோட்டத்துக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வந்து உள்ளது.
பின்னர் அந்த சிறுத்தைப்புலி தோட்டத்தில் போடப்பட்டிருந்த கம்பி கதவு வழியாக தாவி குதித்து உள்ளே சென்றது.
இந்த காட்சியை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தன்னுடைய செல்போன் மூலம் வீடியோ எடுத்து, அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.