தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் வாழைகள் சேதம்
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததில் வாழைகள் சேதம் ஆனது.
2 காட்டு யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் காணப்படுகின்றன. இந்த யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் தாளவாடி வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வெளியேறின. இதையடுத்து அந்த யானைகள் தாளவாடியை அடுத்த சேஷன் நகர் பகுதியை சேர்ந்த விவசாயியான விஜயகுமார் என்பவரின் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் அங்கு 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின.
வாழைகள் சேதம்
இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றன. தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததில் 200 வாழைகள் சேதம் அடைந்தன.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழைகளுக்கு உண்டான உரிய இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிக்கு வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாய தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்துவிடாமல் தடுக்க வனப்பகுதியை சுற்றிலும் அகழி அமைக்க வேண்டும்,' என்றனர்.