தாளவாடி அருகே ரங்கசாமி -மல்லிகார்ஜுனா கோவிலில் தெப்ப திருவிழா


தாளவாடி அருகே  ரங்கசாமி -மல்லிகார்ஜுனா கோவிலில் தெப்ப திருவிழா
x

தாளவாடி அருகே உள்ள ரங்கசாமி, மல்லிகார்ஜுனா கோவில் தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே உள்ள ரங்கசாமி, மல்லிகார்ஜுனா கோவில் தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

ரங்கசாமி- மல்லிகார்ஜுனா சாமி

தாளவாடி அருகே திகனாரை கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ரங்கசாமி, மல்லிகார்ஜுனா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தெப்ப திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று காலை சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் மதியம் 12 மணி அளவில் சாமி வீதி உலா நடந்தது. ரங்கசாமி, மல்லிகார்ஜுனா சாமிகளின் உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டது.

தெப்ப திருவிழா

இதையடுத்து திகனாரை கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக சப்பரம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தெப்ப திருவிழாவுக்காக அங்கு உள்ள குளத்தை சப்பரம் சென்றடைந்தது. அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதையடுத்து குளத்தின் நடுப்பகுதிக்கு சப்பரத்தை பக்தர்கள் சுமந்து சென்றனர். அங்கு குளத்து தண்ணீரில் தேர்வடிவில் இருந்த தெப்பத்தில் சப்பரம் வைக்கப்பட்டு குளத்தை 3 முறை சுற்றி வந்தது. குளத்தின் கரையில் பக்தர்கள் நின்றபடி சாமியை வழிபட்டனர். அப்போது நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்...

பின்னர் குளத்தின் மறுகரைக்கு சப்பரம் கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் சாமிக்கு பூக்கள் வைத்து தரிசனம் செய்தனர்.

விழாவில் தாளவாடி, மெட்டல்வாடி, எரகனள்ளி, தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதையொட்டி தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டா் செல்வம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story