தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம் மக்காச்சோள பயிர் சேதம்
மக்காச்சோள பயிர் சேதம்
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்ததில் மக்காச்சோள பயிர் சேதம் ஆனது.
10 வனச்சரகங்கள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்ெடருமை, காட்டுப்பன்றி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்றவை புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.
இதுபோன்ற சம்பவம் தாளவாடி அருகே நடந்து உள்ளது. இதன் விவரம் வருமாறு:-
விவசாயி
தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட நேதாஜி சர்க்கிள் பகுதியை சேர்ந்தவர் ஆல்மல்லூ (வயது 45) இவர் தனது 5 ஏக்கர் மானாவாரி நிலத்தில் மக்காசோளம் பயிரிட்டு இருந்தார். தற்போது மக்காச்சோளம் நன்கு வளர்ந்த நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வனப்பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறிய காட்டுப்பன்றிகள் ஆல்மல்லூ தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து உள்ளது. இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு காட்டுப்பன்றிகளை விரட்டியடிக்க முயன்றனர்.
மக்காச்சோள பயிர் சேதம்
ஆனால் விவசாயிகளை காட்டுப்பன்றிகள் விரட்ட தொடங்கின. இதனால் பயந்துபோன விவசாயிகள் தோட்டத்தில் உள்ள குடிசை போன்ற பகுதிக்குள் சென்று பதுங்கி கொண்டனர். தொடர்ந்து 3 நாட்களாக காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்ததில் 5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர் சேதம் ஆனது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட மக்காச்சோள பயிருக்கு உண்டான இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட விவசாயியிக்கு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.