தட்டார்மடம் அருகே கிராமமக்கள் சாலை மறியலால் பரபரப்பு
தட்டார்மடம் அருகே கிராமமக்கள் சாலை மறியலால் பரபரப்பு நிலவியது.
தட்டார் மடம்:
தட்டார்மடம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நேற்று பஞ்சாயத்து தலைவர் தலைமையில் கிராம மக்கள்
திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
தனியார் ஆக்கிரமிப்பு
சாத்தான்குளம் யூனியன் நடுவக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பூவுடையார்புரம் விலக்கு பகுதியில் பொதுப்பாதை புறம்போக்கு இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்துள்ளாராம. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஆக்கிரமிப்புகளைஅகற்ற வலியுறுத்தி வந்தனர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கிராம மக்கள் சாலைமறியல்
இந்நிலையில் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றக் கோரி நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவர் சபிதா தலைமையில் கிராம மக்கள் நேற்று திடீரென பூவுடையார்புரம் விலக்கில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. தகவல் அறிந்த சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, யூனியன் ஆணையர் ராணி, தட்டர்மடம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பென்சன், நெல்சன், வருவாய் ஆய்வாளர் வெயிலுகந்தம்மாள், கிராம நிர்வாக அலுவலர் செந்தில், நில அளவையர் மகராசி, உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
அப்போது, குறிப்பிட்ட பகுதியில் உரிய நில அளவீடு செய்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.